தமிழக அரசு ஊக்கத்தொகை பெறுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

சென்னை: இந்தியாவில் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இனத்தை சேர்ந்தவர்கள் சாதி பிரிவின் அடிப்படையில் பட்டியலினத்தவர்களின் கீழ் சேர்க்கப்படுகிறது. இத்தகைய இனத்தவர்கள் சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றமடைய அவர்களுக்கு உரிய கல்வி அளித்து மற்றும் சுயசார்புடையவர்களாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அரசானது பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2013-14ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 2021-22 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் முனைவர் பட்ட ஆய்வாளருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்கத்தொகையும் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஊக்கத்தொகை பெறுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள், குறிப்பாக மாநிலப் பல்கலைக்கழகங்கள், அரசு, மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல்,வணிகம், சமூக அறிவியல் சட்ட பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வாளருக்கு இந்த புதிய வழிகாட்டு முறைகள் பொருந்தும். மேலும் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்காக மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாகவும், மாணவர் முதுநிலை பட்ட படிப்பில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் ஆய்வாளர்கள் வேறு எந்த உதவித்தொகை மற்றும்ம் மானியத் தொகையும் பெற்றிருக்க கூடாது. எம்பில் முடித்தவர்களுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரையும், முதுநிலை பட்டம் படித்தவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையும் ஊக்கத்தொகை கிடைக்கும். இந்த 1 லட்சம் ஊக்கத்தொகை மாதம் பத்தாயிரம் வீதம் பத்து மாதங்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% ஒதுக்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.