தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த 500 மதுக்கடைகளை மூட அரசு திட்டம்

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து 500 மதுக்கடைகளை மூட அவர் நடவடிக்கை எடுத்தார். அவரது மறைவுக்கு பிறகு முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அவரது வழியில் மேலும் 500 மதுக்கடைகளை மூடினார்.

தற்போது தமிழகத்தில் 5370 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் குறைவான மதுபார்கள் செயல்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை. எட்டு மாதங்களாக பார்கள் முடியே உள்ளன. பார் உரிமையாளர்கள் பார்களை திறக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பார் திறப்பது பற்றி அரசு மவுனம் காத்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்து வருவதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரசு பார் வி‌ஷயத்தில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 500-ஐ குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி மதுகடைகளை குறைப்பதன் மூலம் ஆட்சிக்கு நற்பெயரும், செல்வாக்கும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. அந்த வகையில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

விற்பனை குறைவாக உள்ள கடைகள், ஒரு லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகள் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கடைகள் உள்ளன என அதிகாரிகள் கணக்கெடுக்க தொடங்கிவிட்டனர். இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அடிப்படையில் மேலும் 500 மதுக் கடைகளை மூட அரசு முறை செய்கிறது. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் அறிவிப்பு வரும்’ என்று கூறினார்.