மரத்தடியில் சட்டசபையை நடத்திய முதல்வருக்கு ஆளுனர் கிரண்பேடி பாராட்டு

முதல்வருக்கு பாராட்டு... கொரோனா வைரஸ் காரணமாக சட்டசபையை மரத்தடியில் நடத்தியதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற 21ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்தியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரி அரசின் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் எதிரில் கார்கில் நினைவிடத்தில் இன்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் சபநாயகர், எம்எல்ஏ ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ததற்காகவும், சட்டப்பேரவை நிகழ்வை மரத்தடியில் திறந்த வெளியில் நடத்தியதற்காகவும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோருக்கு ஆளுநர் கிரண்பேடி பாராட்டு தெரிவித்தார். மேலும், புதுச்சேரி வரலாற்றில் இந்த நிகழ்வு இடம் பிடித்துள்ளதாகவும், சட்டப்பேரவையை மரத்தடியில் நடத்தியது இந்திய அளவில் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியும், ஆளுநர் கிரண்பேடியும் எலியும், பூனையுமாக இருந்து வரும் சூழலில், அவ்வப்போது பாராட்டிக் கொள்வது, அம்மாநில அரசியலில் ஒரு புதுவிதமான நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.