மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்தார் புதுச்சேரி கவர்னர்

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பல நிபந்தனைகளுடன் புதுச்சேரி மாநிலத்தில் மது கடைகள் திறக்க கவர்னர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது.


பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளன. தமிழகத்திலும் நேரக்கட்டுப்பாடு, சமூக இடைவெளியை கடைப்பிடப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்காக கோப்பில் கவர்னர் கையெழுத்து போடாததால் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதன்காரணமாக தமிழக எல்லையை ஒட்டி உள்ள விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு புதுச்சேரி மாநில மக்கள் மது வாங்க குவிந்தனர்.

இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அபாயமம் எழுந்தது. இதனையடுத்து புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மது கடைகள் திறப்பதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது. சமூக இடைவெளி உட்பட நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.