ரயில், பேருந்துகள் இயங்க பச்சைக் கொடி; கர்நாடக முதல்வரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடியூரப்பா. அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகா மாநிலத்திற்குள் ஓடும் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் 30 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றில் இருவர் பயணிக்கலாம்.

சலூன்கள், ஸ்பா உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்கலாம். மால்களை திறக்க அனுமதியில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் கர்நாடகா முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு, கேரளா, குஜராத், மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களை மே 31ம் தேதி வரை கர்நாடகாவிற்குள் அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.