காலநிலை மாற்றத்திற்கான தொடர் பிரசாரத்தையடுத்து ஒரு வருடத்திற்கு பின் பள்ளி திரும்பிய கிரேட்டா தன்பர்க்

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் இவர் பிரபலமானார். இவர் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார்.

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். காலநிலை மாற்ற பிரசாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ததால், அவர் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை படித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அளவில் அவர் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் லநிலை மாற்றத்திற்கான தனது தொடர் பிரசாரத்தையடுத்து, ஒரு வருடத்திற்கு பிறகு கிரேட்டா மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார். மீண்டும் பள்ளியில் சேருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஸ்கூல் பேக்குடன் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், எந்த நகரத்தில் உள்ள பள்ளியில் தனது படிப்பை தொடரப் போவதாக தெரிவிக்கவில்லை.