மழை காரணமாக கோவையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி, உள்பட 12 வட்டாரங்கல் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 133 திறந்தவெளி கிணறுகள், 32 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அளவிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர் மட்டம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக பெய்தது. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த அக்டோபர் மாதத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 3 வட்டாரங்களை தவிர்த்து மற்ற 9 வட்டாரங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சுல்தான்பேட்டையில் 2.18 மீட்டர், மதுக்கரையில் 2 மீட்டர், தொண்டாமுத்தூரில் 1.78 மீட்டர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.10 முதல் 2.18 மீட்டர் அதிகம்.

நிலத்தடி நீர் மட்டத்தை அளவீடு செய்வதற்கு மின்னணு கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது டேப் மூலம் கிணறுகளில் நீர் மட்டம் அளவிடப்பட்டு வருகிறது. பரிசோதனை முறையாக 10 சதவீத கிணறுகளில் நீர் மட்டத்தை அளவிடும் மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியமாகவும், எளிதாகவும் கணக்கிட முடியும். எதிர்காலத்தில் அனைத்து கிணறுகளிலும் நீர் மட்டத்தை அளவிடும் மின்னணு கருவி பொருத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.