சீக்கியர்களுக்கு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் குருநானக் ஜெயந்தி வாழ்த்து

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குருநானக் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதுதொடர்பாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சீக்கிய நண்பர்களுக்கு எங்களது உளப்பூர்வமான குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்கவுள்ளார். மேலும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.