நேபாளத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பலத்த மோதல்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை விதிகளை மீறுவோருக்கு அபராதம் அல்லது தண்டனையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை வலியுறுத்தப்படுகிறது. இதனை கண்காணிக்கும் பணியில் போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு போர்க்களம்போல் காட்சியளித்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.