மத்திய அரசுக்கும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ‘மி‌ஷன் பெங்கால்’ என்ற பெயரில் தேர்தல் பணிகளை பா.ஜனதா தொடங்கி ஊக்குவித்து வருகிறது. இந்த பணியில் மத்திய மந்திரிகள் உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி உள்ளிட்டோரை களம் இறக்கி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று ஆதரவு திரட்டியபோதுதான் அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் பயணமாக நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்.


நாளை மிட்னாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது சமீபத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சுவேந்து அதிகாரி அவரது முன்னிலையில் பா.ஜனதாவில் இணைகிறார். நாளை மறுநாள் அமித் ஷா பிர்கூம் நகரில் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டுகிறார். முன்னதாக அன்று காலை அவர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் அமித் ஷா மிட்னாபூர், பிர்கூம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்கிறார்.

மிட்னாபூரில் விவசாயி ஒருவரது வீட்டில் அவர் மதிய உணவு சாப்பிடுகிறார். மத்திய அரசுக்கும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அமித் ஷா அங்கு செல்கிறார். அமித் ஷாவை தொடர்ந்து மத்திய மந்திரிகள் கஜேந்திர சிங் செகாவத், சஞ்சீவ் பாலியன், பிரகலாத் படேல், அர்ஜூன் முண்டா, மன்சூப் மாண்டேலியா ஆகியோர் மேற்கு வங்காளம் செல்கிறார்கள்.