பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகை .. பலத்த போலீஸ் பாதுகாப்பு

கேரளா: பிரதமர் மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று (வியாழக்கிழமை) வருகிறார். எனவே இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் மிக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார்.

பிறகு அங்கிருந்து நேராக காலடியில் உள்ள ஆதிசங்கர ெஜன்மபூமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் அவர் இரவு தாஜ் மலபாரில் நடக்கும் பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு ஓய்வெடுத்த பின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

இதை அடுத்து அங்கு அவர் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். முற்றிலும் உள் நாட்டு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பல் இந்திய கப்பல் படைக்கு முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் மங்களூரு புறப்பட்டு செல்கிறார். அங்கு துறைமுக மேம்பாடு உள்பட ரூ.3,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.