இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.எனவே இதன் காரணமாக இன்று தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ‘ஆரஞ்ச்’ நிற அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.