தூத்துக்குடியில் தொடரும் கனமழை... அதிகபட்ச மழை அளவு பதிவு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடியில் அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய அடை மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 17 செ.மீ., தூத்துக்குடி துறைமுகத்தில் 15 செ.மீ., பாபநாசத்தில் 14 செ.மீ. மழை பதிவானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.