குமரியில் கொட்டி தீர்த்த கனமழை... அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக குமரி மாவட்டத்தில் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குமரி மாவட்டத்தில் வெயில் அடிக்காமல், மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியத்துக்கு பிறகு பலத்த மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அது பலத்த மழையாக மாறியது. மழை பெய்யும் போது சிறிதும் கூட காற்று வீசாததால் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 12.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இது போன்று பேச்சிப்பாறை-9.6, பெருஞ்சாணி-6.8, சிற்றார் 1-10.4, நாகர்கோவில்-9, பூதப்பாண்டி-10.2, சுருளகோடு-5.4, மயிலாடி-9.4, ஆனைகிடங்கு-6.2, புத்தன்அணை-6, திற்பரப்பு-8, கன்னிமார்-1.2, ஆரல்வாய்மொழி-1.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு போதுமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 619 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 323 கனஅடி தண்ணீரும் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 730 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 450 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.