அதிபர் டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டன்னில் அவரது ஆதரவாளர்கள் பேரணி

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 304 இடங்கள் பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் அமெரிக்காவில் தாங்கள் அதிபர் பதவி ஏற்ற பின், அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டனர். அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி இருந்த டிரம்ப், ஜோ பைடன் தந்திரமாக வெற்றி பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியில் பேரணியாக சென்றனர். அப்போது மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி நடத்த வாய்ப்பு கொடு என அவர்கள் குரல் கொடுத்தனர். இவர்களுடன் பல அமைப்புகளும் சேர்ந்து கொண்டுள்ளன.

மில்லியன் மெகா மார்ச், மார்ச் ஃபார் டிரம்ப், ஸ்டாப் தி ஸ்டில் உள்ளிட்ட பல தலைப்புகளில் போராட்டம், பேரணிகள் நடைபெற உள்ளன. இதனால் அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த பேரணி நடைபெற்று வருகிறது.