தனியார் லாக்கர்களில் பணம், நகை பதுக்கல்... பாஜ எம்பி குற்றச்சாட்டால் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ரூ.500 கோடி கருப்பு பணம்... ஜெய்ப்பூரில் உள்ள தனியார் லாக்கர்களில் ரூ.500 கோடி ரொக்கம் மற்றும் 50 கிலோ தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்பி கிரோடி லால் மீனா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சவாய் மாதோபூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரோடி மீனாவும் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “ ஜெய்ப்பூரில் தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ரூ.500 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ தங்கமும் வைக்கப்பட்டுள்ளது.

லாக்கர் இருக்கும் இடத்துக்கு வெளியே நான் அமர்ந்து இருக்கிறேன். போலீசார் வந்து லாக்கர்களை திறக்கும் வரை நான் அங்கு இருப்பேன். பணத்தை பதுக்கிய வைத்தவர்களின் பெயர்களை சொன்னால் அரசியல் அழுத்தத்தால் லாக்கர்களை திறக்க மாட்டார்கள்’’ என்றார். பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜ எம்பி வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.