தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ... மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையடுத்து இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக திருப்பூர் , கோவை, திண்டுக்கல் , தேனி , மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி,குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.