இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பள்ளிகளுக்கு விடுமுறை

இலங்கை : இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு நெருக்கடியை சமாளிக்க விவசாய பணியில் ராணுவம் இறங்கி உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியா சார்பில் 31,288 கோடி இலங்கைக்கு கடன் உதவி அளித்துள்ளது. வாகனங்கள் எல்லாம் பெட்ரோல் பங்க் முன் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில், எரிபொருளைச் சேமிக்கும் முயற்சியில், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை சுற்றிய நகரங்களின் பள்ளிகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் கற்பித்தலை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் இன்மையால், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான ஆறு மையங்கள் மூடப்பட்டுள்ளதாக தேர்வுகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.