கனடாவில் ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் மாலை திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயமடைந்த பெண்ணுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை எந்த தகவல்ளும் வெளியாகவில்லை.

இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல. மேலும், பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இந்த மேலும் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.