வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் தடை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது ஹாங்காங்கில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான பயணங்களுக்கு முன்பாக முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இன்று முதல் 31ம் தேதி வரை விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹாங்காங்கில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து ஹாங்காங்கிற்கும் சிறப்பு விமானங்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் இருந்து 14ம் தேதி ஹாங்காங் வந்த விமானத்தில் பயணித்தவர்களில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.