ஹாங்காங் மக்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும்; தைவான் வலியுறுத்தல்

அடக்குமுறையை கைவிட வேண்டும்... ஹாங்காங் மக்கள் மீதான அடக்குமுறையை சீனாவும், சீன ஆதரவு ஹாங்காங் அரசும் கைவிட வேண்டுமென தைவான் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத்துரோக குற்றச்சாட்டில் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது.இந்நிலையில், ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேரை தகுதிநீக்கம் செய்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹாங்காங்கில் மேலும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தைவான் ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹாங்காங்கின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. சிவப்பு பயங்கரவாதத்தின் இருண்ட தருணத்தை ஹாங்காங் வெளிப்படுத்தியுள்ளது.

ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை சீனா வரம்புமீறி பறிப்பதையும் ,பயங்கரவாத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்தை உலகம் இப்போது தெளிவாகக் காணலாம் 'இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

ஆனால் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தைவான் அதிபர் சாய் இங் வென் ,சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.