மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும்

கேரளா: கேரளா உயர்நீதிமன்றம் கண்டிப்பு... மருத்துவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும் என்று கேரள அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையாகி அரசு தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற ஆசிரியரான சந்தீப் என்பவன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொன்றான்.

இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சந்தீப்பின் செயல்பாடுகள் அசாதாரணமாக இருப்பதை அறிந்தும் போலீசார் ஏன் உரிய கண்காணிப்பை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியது.

வந்தனா கொல்லப்பட்ட சம்பவம், கேரள அரசின் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு தோல்வி என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

போராடும் மருத்துவர்களுக்கும், அவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மாநில டி.ஜி.பி ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.