கொரோனா தொற்று காற்றில் பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து கொரோனா குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பயணிக்க முடியுமா, அப்படியே பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வான்வழி பரவக்கூடியது என்பதற்கு ஆதாரம் உள்ளது என எழுதி உள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்குமா என்பதை அறிவதற்கான ஆய்வை அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்.) அங்கமான ஐதராபாத்தின் சி.சி.எம்.பி. என்னும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் தொடங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதை சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா கூறுகையில், கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பயணிக்கும், எவ்வளவு நேரம் பயணிக்கும் என்பதை நாங்கள் பார்க்கப்போகிறோம் என்று கூறினார். அதன்படி, கொரோனா எவ்வளவு தூரம் பரவுகிறது என்பதை பொறுத்தே அதன் பரவல் கணிக்கமுடியும்.