மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் எந்தந்த விதத்தில் தண்டனை வழங்கலாம் ... குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் ஆசிரியர்கள் திட்டியதும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதை பார்க்கிறோம். இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் ஐந்து முறை தவறை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதாவது, ஒரு குழந்தை படிக்கவில்லையெனில் முதலில் அந்த குழந்தை எதற்காக படிக்கவில்லை என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் பள்ளி ஆலோசகர் மாணவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், அதே மாணவர் திரும்ப திரும்ப தவறு செய்தால் ஆசிரியர்கள் ஒழுங்குமுறை நுட்பங்களை கையாளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவர் தவறு செய்யும் போது எந்த விதத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

ஐந்து திருக்குறளை அதன் பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட சொல்லலாம்.
பெற்றோரிடம் இருந்து இரண்டு கதைகளை கேட்டுவந்து வகுப்பறையில் சொல்ல வேண்டும்.
ஒரு வாரம் முழுக்க தினமும் ஐந்து செய்திகளை சேகரித்து வகுப்பறையில் படித்து காட்ட வேண்டும்.

ஒரு வாரத்திற்கு வகுப்பு தலைவராக வேண்டும்.
ஐந்து முக்கிய வரலாற்று தலைவர்களை பற்றி அறிந்து வகுப்பறையில் அது குறித்து பேச வேண்டும்.
தினமும் என்னென்ன பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, சிறிய அளவிலான காய்கறி தோட்டம் ஆகியவை குறித்தான கற்பனையை வரைபடமாக வரைய வேண்டும்.
கைவினை பொருட்களை செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் ஆகிய எளிமையான முறையில் மாணவர்களை கையாள வேண்டும்.

மேலும், குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் எதற்காக அந்த குழந்தை அந்த தவறை செய்தது, அந்த தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை சிந்திக்க 1 மணி நேரமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரே மாணவர் நான்கு முறை தவறு செய்யும் போது அருகில் இருக்கும் காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அதிகாரி (CWPO) மூலம் குழந்தைக்கு அறிவுரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.