நிசர்கா புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக 5 பேர் உயிரிழப்பு

அரபிக்கடலில் கடலில் உருவான நிசர்கா புயல் நேற்று முன்தினம் சுமார் 110 கி.மீ. வேகத்தில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலால் ராய்காட் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. இந்த மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதேபோல அருகே உள்ள மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய கடலோர மாவட்டங்களும் சூறாவளி காற்று மற்றும் மழையால் சேதத்தை சந்தித்தன.

இதற்கிடையே நிசர்கா புயலின் காரணமாக நேற்று 2-வது நாளாக மும்பை, தானே, நவிமும்பை உள்பட மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மும்பையை பொறுத்தவரை காலை நேரத்தில் தாதர், தாராவி, சயான், ஒர்லி, சாந்தாகுருஸ், கொலபா, காந்திவிலி, மலாடு, விக்ரோலி, காட்கோபர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

மும்பையில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்ற மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்கோபர் ராம்நகரில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தானே பிளவர் வெலி குடியிருப்பு பகுதியில் மரம் சரிந்து அங்கு இருந்த காரின் மீது விழுந்தது. இதனால் கார் சேதமடைந்தது.

புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை பெருநகர பகுதியில் நேற்று காலை 9.30 மணி முதல் பெய்த மழையில் அதிகப்பட்சமாக கன்சோலி - 70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.