சமையலுக்கு தக்காளியை பயன்படுத்தி கணவர்... கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி

மத்திய பிரதேசம்: சிறிய ஹோட்டல் நடத்தி வரும் கணவர், மனைவியை கேட்காமல் சமையலுக்கு தக்காளியைப் பயன்படுத்தி உள்ளார். இதனால் அவரது மனைவி கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்த விநோத சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

சாதாரணமாக கிலோ ரூ.20 அல்லது ரூ.30-க்கு விற்கப்படும் தக்காளி தற்போது கிலோ ரூ.100-க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்தோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் இவர் சமையலுக்கு மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளிகளை எடுத்து பயன்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டது.

தன்னிடம் கேட்காமல் தக்காளியை பயன்படுத்தியது மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தக்காளி விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கவே மனைவி கோவித்துக்கொண்டு மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மனைவியை பல இடங்களில் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று நாட்களாகியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சஞ்சீவ் பர்மன் இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் எப்படியும் அவரது மனைவியை தேடி கண்டுபிடித்து ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனராம்.