எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன் - கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அதிபராவதற்கு 270 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை வகிக்க வேண்டும். தற்போதைய தேர்தலில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அவர் அதிபராக உள்ளார்.

இதனால் அமெரிக்காவின் துணை அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் வெற்றி உரையாற்றியபோது, என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி என்று கூறினார்.

மேலும் அவர், நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூர்கிறேன். ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல். துணை அதிபராகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம்தான். ஒரு பெண்ணை துணை அதிபராக தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.

நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன. கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன். பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.