விமான பயணிகளை தனிமைப்படுத்தும் பிரிட்டன் அரசின் திட்டத்திற்கு எதிராக ஐஏஜி வழக்கு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விமான போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால், விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. மேலும், பல ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அதிகரித்து வரும் வேலையின்மை காரணமாக , விமான நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நாடுகளும் சூழ்நிலை மற்றும் கள நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நிபந்தனைகளை விமான சேவைகளுக்கு விதித்துள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு விமானத்தில் வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால், விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தற்போது, இதுகுறித்து இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (ஐஏஜி) தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, அரசின் தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக, வழக்கு தொடர்வது பற்றி பரிசீலனை செய்து வருவதாகவும், இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விமான தொழில் மிகவும் கடினமான சவாலை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் கடந்த மாதம் 485 பயணிகள் விமானங்களை மட்டுமே இயக்கியது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.