திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்... பாஜ அண்ணாலை சவால்

சென்னை: முடிந்தால் கைது செய்யுங்கள்... வடமாநிலத்தவர் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளத்தில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. தொடர்ந்து முதலமைச்சர் வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று தெரிவித்து இருந்தார். மேலும் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இதை தொடர்ந்து காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்தார். இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது.

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வடமாநில மக்களை ஏளானமாக பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவு தான் இன்றைய நிலைக்கு காரணம் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிக்கையை தொடர்ந்து அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பீகாரின் பாஜக ட்விட்டர் பக்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கபடுவதாக வீடியோக்கள் வெளியிட்ட நிலையில் தமிழக போலீசார் அந்த ட்விட்டர் கணக்கை கையாளும் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.

அதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என சவால் விடுத்துள்ளார்.