சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் இருகரம் விரித்து வரவேற்போம் - கஜேந்திர சிங் செகாவத்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், மாநில அரசில் துணை முதல்-மந்திரியாகவும் சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்நிலையில் சச்சின் பைலட் முதல்-மந்திரி அசோக் கெலாட்க்கு எதிராக கொடி உயர்த்தியதால், நேற்று அந்த பொறுப்புகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

காங்கிரசில் நீண்டகாலமாக முன்னணி தலைவராக சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதால், அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என அனைத்து கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது.

தற்போது சச்சின் பைலட்டுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து உள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறுகையில், மிகப்பெரிய அடித்தளம் கொண்ட ஒருவர் பா.ஜனதாவிலோ அல்லது வேறு எந்த கட்சியிலோ சேர்ந்தால், அவரை அனைவரும் வரவேற்பர். எங்கள் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து யாராவது வந்தால், அவர்களை நாங்கள் இருகரம் விரித்து வரவேற்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு பாஜக தலைவரான பி.பி.சவுத்ரி, காங்கிரசில் இருந்து ஒரு இளம் தலைவர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார். காங்கிரசில் இளம் தலைவர்களுக்கு இடமில்லை. எனவே ஏராளமானவர்கள் அவருடன் இணைந்து வருகின்றனர். எங்கள் கொள்கைகளை நம்புவோருக்கு பா.ஜனதாவின் கதவு திறந்தே இருக்கிறது. சச்சின் பைலட் எங்களுடன் சேர்ந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படும் என நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.