புரவி புயல் காரணமாக வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் மக்கள் பாதிப்பு... வங்காள விரிகுடாவில் உருவாகிய ‘புரவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புயல், வவுனியாவின் ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை முதல், வவுனியா மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

மேலும் கடும் காற்று காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகபிரிவில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசிக்கும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த 211 பேர், தமது உறவினர் வீடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இதேவேளை இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு முன்பாக நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து வீதியில் வீழ்ந்துள்ளதுடன், சாந்தசோலைப்பகுதி மற்றும் புளியங்குளம் நெடுங்கேணி பிரதான வீதியில் நின்றிருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளன.

இதனால் குறித்த வீதிகளுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சிலமணி நேரங்களின் பின்னர் அது வழமைக்கு திரும்பியிருந்தது. நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.