முக்கியத்துவம் வாய்ந்த பயணம்... ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியா சென்றார்

மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர் வடகொரியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் காங் சுன்-நாம் வரவேற்றார்.

கொரியப் போர் முடிவடைந்த 70வது ஆண்டு விழாவில் ரஷ்ய தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான லி ஹாங்ஜோங், தனது பரிவாரங்களுடன் இந்த வாரம் வடகொரியாவுக்குச் செல்ல உள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அமைச்சரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவும் சீனாவும் வடகொரியாவின் நீண்டகால நட்பு நாடுகள். கொரியப் போரில் 1.8 லட்சம் சீன வீரர்கள் உயிரிழந்தனர்.

போரின் போது ரஷ்யாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக இருந்தது. வடகொரியாவின் பல்வேறு ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் இரு நாட்டு அணிகளின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.