வெங்காயம் விலை கட்டுக்குள் கொண்டுவர எகிப்து வெங்காயம் இறக்குமதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு மராட்டிய மாநிலம் நாசிக், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாரி வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.115 வரை மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது. எனவே இந்த ஆண்டும் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எகிப்து வெங்காயம் மீண்டும் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் தமிழகத்துக்கு சுமார் 140 டன் வரை வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தேவையை பொறுத்து இனிவரும் நாட்களில் எகிப்து வெங்காயத்தின் வரத்து இருக்கும் என்றும், எகிப்து வெங்காயத்தை தொடர்ந்து துருக்கி வெங்காயமும் அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் எகிப்து வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது.

பல்லாரி வெங்காயத்தை போலவே, சாம்பார் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆன சாம்பார் வெங்காயம், தற்போது ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.