பாகிஸ்தானை விட்டு 15 நாளில் வெளியேற வலைத்தள பெண் பதிவருக்கு இம்ரான்கான் அரசு கெடு

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் சிந்தியா ரிச்சி, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலம் அடைந்தார். இதனால் இவரை டுவிட்டரில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ குறித்து அவர் வெளியிட்ட பதிவு, அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அவர், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக சிந்தியா ரிச்சி தன்னிடம் கூறினார் என அவரது நண்பரான டி.வி. பிரபலம் அலி சலீம் பரபரப்பு தகவல் வெளியிட்டார்.

பாகிஸ்தானில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த சிந்தியா ரிச்சியின் விசா கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முடிந்து விட்டது. இதனால் அவர் மீதான வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, அவரது விசா தொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்தது. மேலும், சிந்தியா ரிச்சிக்கு முறையான உதவிகளை வழங்க இம்ரான்கான் அரசுக்கு இறுதி வாய்ப்பை அளித்தது.

தற்போது, சிந்தியா ரிச்சியின் விசா நீடிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், 15 நாளில் அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.