குஜராத்தில் மாஸ்க் அணியாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ,1,000 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்னும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் மாஸ்க் அணியாத நபர்களுக்கு முதலில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால் மாநிலத்தில் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் விதிக்கப்படும் அபராதம் ஆகஸ்ட் 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

தற்போது குஜராத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இந்த நடைமுறை ஆகஸ்ட் 11 முதல் அமலுக்கு வரும் எனவும், கொரோனா பரவலைக் குறைக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.