இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 57.43 சதவீதம் பேர்

குணமடைந்தவர்கள் சதவீதம் அதிகரிப்பு... இந்தியாவில், கொரோனாவிலிருந்து 57.43 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: வரும் 26 மற்றும் 29 தேதிகளில் சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தலைமையில் மத்திய குழுவினர் மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி, அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவார்கள். கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 13, 012 பேர் பேர் குணமாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,71,696 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் சதவீதம் 57.43 சதவீதம் ஆகும். ஒரு லட்சம் பேருக்கு இந்தியாவில் 33.29 பேருக்கும் உலகளவில் 120.21 பேருக்கும் தொற்று ஏற்படுகிறது. அதேபோல், உயிரிழப்பு விகிதமும் இந்தியாவில் குறைவாக உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு இந்தியாவில் 1.06 பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் 6.24 பேர் மரணமடைகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.