இந்தியாவில் 91 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

கொரோனாவிலிருந்து மீண்டனர்... இந்தியாவில், 91.96 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகக்கூடிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (நவ.,2) இந்தியாவில் ஒரே நாளில் 38,310 பேருக்கு கொரோனா உறுதியானது.

58 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்தது. தற்போது 5.41 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 1,23,097 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் அக்.,3 முதல் நவ.,3 வரை கேரளா, டெல்லி, மேற்குவங்கம், மணிப்பூர் மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன. கொரோனா தொற்று பெருமளவு குறைந்த மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தினசரி கொரோனா பாதிப்பு, செப்.,16 - 22 காலகட்டத்தில் 90,346 ஆக இருந்த நிலையில் அக்.,28 - நவ.,3 வரையிலான காலகட்டத்தில் 45,884 ஆக குறைந்தது.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91.96 சதவீதமாகவும், பாதிப்பு விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.