கர்நாடகத்தில் ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 87 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 43 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பெங்களூருவில் மட்டும் பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 2 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 2,496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 87 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு இதுவரை 848 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநிலத்தில் புதிதாக 2,496 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகியுள்ளனர். இதில் 56 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடகத்தில் இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 822 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 23 ஆயிரத்து 674 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.