கர்நாடகத்தில் ஒரே நாளில் 91 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலி

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை அங்கு சுமார் 59 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக தலைநகரான பெங்களூருவில் மட்டும் தினமும் 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், சராசரியாக 50 பேர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். தற்போது கர்நாடகத்தில் நேற்று மட்டும் புதியதாக 4,120 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 91 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் புதிதாக 4,120 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 772 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 23 ஆயிரத்து 65 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, மாநிலம் முழுவதும் 39 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெங்களூரு நகரில் மட்டும் 2,156 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் ஆவர். மாநில தலைநகர் பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று வரை பெங்களூருவில் மட்டும் 31 ஆயிரத்து 777 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.