அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை கொரோனா காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் செல்கிறது. தற்போது, அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.38 லட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது வரை,கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கவுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடாக பிரேசில்,இந்தியா ,ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.