விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,332 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,332 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 271 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 4 ஆயிரத்து 705 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 13 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 15 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,332 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் 2,046 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 4,705 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.