மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் : காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாகவுள்ளது. இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளிலிருந்து உரிய நீரை திறந்துவிடாததாலும் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 562 கனஅடியாகயிருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் 5,018 கன அடியாகவும், நேற்று காலை 6,430 கனஅடியாகவும் உயர்ந்தது .காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 48.24 அடியாகவும், நீர் இருப்பு 16.72 டிஎம்சியாகவுமிருந்தது.

இதனை அடுத்து விடுமுறை தினத்தையொட்டி, மேட்டூர் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் அணைப் பூங்காவுக்கு 6,214 பேர் வந்து சென்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அளவீட்டின்போது காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.