கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்... உலகிலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகி அதிலிருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் இந்தியாவில் 21 சதவீதமாக உள்ளது.

அதேவேளையில் உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 18.6 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையில் பல நாடுகளைக் காட்டிலும் இந்தியா கடைசி இடத்திலேயே உள்ளது.

இன்றைய தேதிப்படி, உலகளவில் கொரோனா பாதித்தவர்களில் பலியாவோரின் சராசரி விகிதம் என்பது 2.97 சதவீதமாக இருந்தாலும், இந்தியாவில் இது 1.56 சதவீதமாகவே உள்ளது.

கொரோனா பாதித்த 10 லட்சம் பேரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற விகிதத்தில் உலகிலேயே இந்தியா தான் மிகக் குறைவான விகிதத்துடன் உள்ளது. உலக சராசரி பத்து லட்சம் பேருக்கு 130 பேர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்தியாவிலோ இது 73 பலியாக உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததை அடுத்து, இதுவரை ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 83.84 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.