இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது

புதுடெல்லி: இந்தியா உறுதியுடன் உள்ளது... இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமூக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து திரவுபதி முர்மு அனுப்பியுள்ள பதில் கடிதம்:

தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இலங்கையின் 8-வது அதிபராக நீங்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இந்தியாவின் கொள்கை.

மிக நெருங்கிய நாடான இலங்கை தனது பொருளாதார நெருக்கடி சவால்களை சமாளிக்க உதவுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு, மக்கள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.