உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தை எட்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. பல்வேறு நாடுகள் கொரோனாவை கையாள முடியாமல் திணறி வருகின்றன. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வராததால், மனிதர்களின் இயல்பு வாழ்க்கையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டும் முடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய-மாநில அரசுகள் கொரோனா பாதிப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,065 ஆகும். இதனால் நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. இரவு 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 41 லட்சத்து 60 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது உலக அளவில் அதிக கொரோனா தொற்று கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை எட்டியது.2-வது இடத்தில் நீடித்து வந்த பிரேசில் நாடு 41 லட்சத்து 23 ஆயிரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 64 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்துள்ளது.