இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை 4 மடங்கு உயர்த்த திட்டம் - பிரதமர் மோடி

குஜராத்தின் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் உரையாற்றியபோது, இந்தியாவின் கார்பன் தடத்தை 30 முதல் 35 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயித்து, இன்று அதை நோக்கி நாடு நடைபோட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் அவர், இந்த இலக்கு குறித்து நான் உலக நாடுகளுக்கு தெரிவித்தபோது, அவை வியப்பை வெளியிட்டதுடன், இதை இந்தியா சாதிக்குமா? எனவும் ஆச்சரியம் வெளியிட்டன. நமது எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை இந்த பத்தாண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பதே நமது திட்டமாகும். அதைப்போல வருகிற 5 ஆண்டுகளில் நமது எண்ணெய் சுத்திகரிப்பு திறனை சுமார் இரு மடங்காக உயர்த்துவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இன்று சோலார் மின்சக்தியே நாட்டின் முன்னுரிமையாக மாறியிருக்கிறது. முன்பு ரூ.12-13 வரை இருந்த ஒரு யூனிட் சோலார் மின்சக்தியின் கட்டணம், இன்று ரூ.2 ஆக குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் திறனை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என நிகழ்ச்சியில் மோடி கூறினார்.

மேலும் அவர், நீங்கள் பாதுகாக்க விரும்பும் ஏதேனும் யோசனை, தயாரிப்பு அல்லது ஏதேனும் கருத்து இருந்தால், அதற்கு இந்த நிதி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும் இது உங்களுக்கு அரசு வழங்கும் ஒரு பரிசும் ஆகும். கொரோனா தொற்று காரணமாக கடினமான சூழல் நிலவிய போதும், பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பலமும், திறனும் இந்த சவாலை விட பெரியவை என நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.