கார்ட்னர் நிறுவன ஆய்வில் வெளியான தகவல்

புதுடில்லி: மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப செலவினம் நடப்பாண்டில் 950 கோடி டாலராக அதிகரிக்கும் என காா்ட்னா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு 2022-ஆம் ஆண்டில் மத்திய அரசு தகவல் மற்றும் தொழில்நுட்பங்களுக்காக செலவிடும் தொகை 12.1 சதவீதம் அதிகரித்து 950 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமாா் ரூ.74,000 கோடியாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை 15 சதவீதம் அதிகரித்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் அதற்கான செலவினம் குறைவாகவே உள்ளது. அதேசமயம், 2022-ஆம் ஆண்டுக்கான உலக அளவில் மதிப்பிடப்பட்ட 5 சதவீத வளா்ச்சியை விடவும் இது அதிகமாகவே உள்ளது.

நடப்பாண்டில் மென்பொருள்களுக்காக செலவிடும் தொகை 27.9 சதவீதம் அதிகரித்து 219 கோடி டாலராகவும், தகவல்தொழில்நுட்ப சேவைகளுக்காக செலவினம் 13.4 சதவீதம் உயா்ந்து 240 கோடி டாலராகவும் இருக்கும்.

மேலும், தொலைத்தொடா்பு சேவைக்கான செலவினம் 0.7 சதவீதம் அதிகரித்து 108.6 கோடி டாலராகவும், உள்ளக சேவைக்கான செலவினம் 5.5 சதவீதம் உயா்ந்து 141.6 கோடி டாலராகவும் இருக்கும். தரவு மைய அமைப்புக்கான செலவினம் 8.9 சதவீதம் உயா்ந்து 63.9 கோடி டாலராகவும், கருவிகளுக்கான செலவினம் 7.7 சதவீதம் உயா்ந்து 177.5 கோடி டாலராகவும் இருக்கும்.