இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான தகவல்

இலங்கை: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பலமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அப்பேச்சுவார்த்தைகளில் சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இணக்கம் ஏற்பட்டுள்ள 2.9பில்லியன் டொலர்களைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பில் மறுசீரமைப்பினைச் செய்வதற்கான இணக்கச் சான்றிதழை சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவைப் போன்று ஏனைய நாடுகளும் இணக்கச் சான்றிதழை அளிப்பதற்கு இணங்கியுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது சீனாவுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவின் எக்ஸிம் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விரைவில் அதுகுறித்த இணக்கச் சான்றிதழை அந்நாடும் சர்வதேச நாணயநிதியத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து முதற்கட்ட நிதியைப் பெற்றுக்கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.