இலங்கையில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என தகவல்

சமூகத்திற்கு கொரோனா பரவல் இல்லை... இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் மாத்திரமே என அந்தப் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு நபருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24,878 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதனடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 5000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.