அரியர் தேர்வு ரத்து விவகாரம்: வீடியோ கான்பரன்சிங்கில் அதிகமானோர் இணைந்ததால் விசாரணை நிறுத்தம்

அரியர் தேர்வு ரத்து குறித்த வழக்கு விசாரணையின் போது வீடியோ கான்பரன்சிங்கில் ஒரே நேரத்தில் அதிகமானோர் இணைந்ததால் விசாரணை நிறுத்தப்பட்டது.

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரணையை நடத்தினர்.

அப்போது, வழக்கு தொடர்பான விசாரணை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக ஏராளமான மாணவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்தனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டடோர் இணைந்ததால் விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டது.

வீடுகளின் தொலைக்காட்சி ஒலி, மாணவர்களின் பேச்சுக்கள் என தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். மாணவர்கள் அமைதியாக வீடியோ கான்பரன்சிங்கை விட்டு வெளியேறும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால் யாரும் வெளியேறவில்லை.

இதனால் விசாரணை நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவராக வீடியோ கான்பரன்சிங்கில் இருந்து நீக்கப்பட்டனர். மாணவர்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.